போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள குழுமணியில் புத்தாண்டு தினத்தன்று இரவில் சிலர் கேக் வெட்டியபோது, இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். மறுநாள் இரவு சுக்கான்குழி பகுதியில் உள்ள கோவில் முன்பு இருபிரிவினருக்கு இடையே மீண்டும் மோதல் நடந்தது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்தநிலையில் சுக்கான்குழி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்து, மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "எங்கள் பகுதியில் நடந்த மோதல் விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட ஜீயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் முக்கிய நபரை கைது செய்ய வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.