அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு


அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் மனு அளித்தனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் 351 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 73 மனுக்கள் பெறப்பட்டது.

அடிப்படை வசதி

கூட்டத்தில் கடவூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டு காணிகளத்தூர், காணியாளம்பட்டி ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வசதி, பொது கழிப்பறை, மழை காலங்களில் மழைநீர் ஊருக்குள் வராமல் தடுப்பு சுவர், கழிவுநீர் வெளியேறும் வாய்க்கால், சமுதாய கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி கேட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு போராடி வருகின்றனர். எனவே தாங்கள் நேரில் களஆய்வு செய்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இதேபோல் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, வீரியப்பட்டி, சமத்துவபுரம் ஊர்ப்பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வசதி, தெருவிளக்கு, சிமெண்டு சாலை வசதி ஆகியவற்றை நிறைவேற்றி தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆழ்குழாய் கிணறு

புகழூர் தாலுகா, கார்வழி கிராமம், சீலநாயக்கன்பட்டி பொதுமக்கள் சார்பில் தே.மு.தி.க. கரூர் மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- மேற்படி முகவரியில் வசித்து வரும் ஒருவருடைய சொந்தமான கிணற்றில் இருந்து அருகில் உள்ள நிறைய கல்குவாரிகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் கனரக வாகனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு இரவு, பகல் பாராமல் 100 நடைகளுக்கு மேல் எடுக்கின்றனர். இதனால் அருகில் உள்ள எங்களது பஞ்சாயத்து ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் சாலைகளும் பாதிக்கின்றது. எனவே இதன்மீது நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரின் குடிநீர் மற்றும் சாலைகளை பாதுகாத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள்

கரூர் வெண்ணைமலை, காதப்பாறை ஊராட்சி அன்புநகர் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் அன்புநகரில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளது. குடியிருப்பு பகுதியில் தற்போது கொசுவலை தயாரிக்கும் தொழிற்கூடம் மற்றும் பாலீத்தின் பை தயாரிக்கும் தொழிற்கூடம் ஆகியவை இயங்கி வருகிறது. மேலும் இது 24 மணி நேரமும் இயங்கி வருவதால் எங்கள் பகுதி மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் இரைச்சலால் வயதானவர்கள், குழந்தைகள் படிக்கவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் அல்லல்படுகின்றனர். மேலும் சுற்றுப்புற பகுதி மாசு அடைந்து வருகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து தொழிற்சாலைகளை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்


Related Tags :
Next Story