தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரக்கோரி பெண்கள் மனு


தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரக்கோரி பெண்கள் மனு
x

தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார். மேலும் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம், விபத்தில் காயமடைந்த 2 பேருக்கு ரூ.1 லட்சம், ஒரு மாணவருக்கு உயர்கல்வி நிதிஉதவி ரூ.50 ஆயிரம், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணை ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

தொகுப்பு வீடுகள்

கூட்டத்தில் திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த பெண்கள் தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரும்படி கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 21 தொகுப்புவீடுகள் கட்டித்தரப்பட்டன. அந்த வீடுகள் அனைத்தும் சேதமாகிவிட்டதால் குடியிருக்கும் நிலையில் இல்லை. எனவே அந்த வீடுகளை சீரமைத்து, குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், என்றனர்.

வேடசந்தூர் தாலுகா வெள்ளனம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் பல ஆண்டுகளாக ஆதிசிவன்-பார்வதிதேவி கோவிலில் வழிபாடு செய்து வருகிறோம். அங்கு தற்போது மண்டபத்துடன் கோவில் கட்டும் பணி நடக்கிறது. இதற்கிடையே கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் குழந்தைகள், இளைஞர்கள் விளையாட்டு மைதானம், பொதுக்கழிப்பறை வசதி இல்லை. எனவே கோவில் கட்டும் இடம், குளத்தின் கிழக்கே உள்ள மேட்டுப்பகுதியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

சாலை வசதி

சின்னகலையம்புத்தூரை சேர்ந்த விவசாயி மகுடீஸ்வரன் கொடுத்த மனுவில், சின்னகலையம்புத்தூரில் இருந்து நெய்க்காரப்பட்டி சாலையில் 1½ கி.மீ. தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தரவேண்டும், என்று கூறியிருந்தார்.

தாண்டிக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு கொடுத்த மனுவில், தாண்டிக்குடியில் இ-சேவை மையத்தை திறக்க வேண்டும். தாண்டிக்குடி முதல் மங்களம்கொம்பு வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வத்தலக்குண்டு, தாண்டிக்குடி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆத்தூர் தாலுகா என்.குரும்பபட்டியை சேர்ந்த 85 வயது மூதாட்டி, தனது சொத்துகளை மகள் ஏமாற்றி எழுதி வாங்கி கொண்டதாகவும், பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு கொடுத்தார்.


Next Story