வடகல்பாக்கம் ஆதிதிராவிடர் நல பள்ளிக்கு கட்டிடம் கட்டி தரக்கோரி மனு
வெம்பாக்கம் ஒன்றியம் வடகல்பாக்கம் ஊராட்சியில் சேதமடைந்ததால் இடிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளிக்கு கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
வெம்பாக்கம் ஒன்றியம் வடகல்பாக்கம் ஊராட்சியில் சேதமடைந்ததால் இடிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளிக்கு கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி முன்னிலை வகித்தார்.
இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கு கட்டிடம் வேண்டும்
குறைதீர்வு கூட்டத்தில் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வடகல்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வடகல்பாக்கம் ஊராட்சியில் கடந்த 1945-ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் கட்டிடம் சேதம் அடைந்ததால் ஒரு வருடத்துக்கு முன்பு இடிக்கப்பட்டது. பின்னர் அங்கு இதுவரை பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படவில்லை.
தற்போது பள்ளிக் குழந்தைகளின் நலனை கருத்தில் ெகாண்டு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கிராமத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தற்போது 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.