முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு
பழனியில், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க.வினர் மனு அனுப்பினார்.
திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் பாரதிதாசனுக்கு தபாலில் மனு அனுப்பும் நிகழ்ச்சி பழனியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வைரமுத்து தலைமை தாங்கினார். பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜரத்தினம், பா.ம.க. பழனி நகர செயலாளர் பிரபாகரன், நகர செயற்குழு உறுப்பினர் மகாமுனிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட தலைவர் வைரமுத்து தலைமையில் அக்கட்சியினர் அலுவலகம் முன்புள்ள தபால் பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டனர். அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடதுக்கீட்டை வருகிற மே 31-ந்தேதிக்குள் நிறைவேற்றி சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.