40 கிராமத்தினர் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
ராமநாதபுரம் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு 40 கிராமத்தினர் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு 40 கிராமத்தினர் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
40 கிராமத்தினர் சார்பில்...
ராமநாதபுரம் மாவட்ட ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, வடமாடு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 40 கிராமத்தினர் சார்பில் ஏராளமானோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தாதனேந்தல் பஞ்சாயத்திற்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் சாத்துடையார் அய்யனார் கோவிலில் கடந்த 55 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, போன்ற விழாக்கள் நடைபெற்று வந்தது. அதேபோல, இந்த ஆண்டு கோவிலுக்கு பாத்தியப்பட்ட பொக்கனாரேந்தல், பள்ளபச்செரி, தாதனேந்தல் உள்ளிட்ட அனைத்து கிராமங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஒன்று கூடி மே 20-ந் தேதி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம்.
அனுமதிக்க வேண்டும்
மேற்கண்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் சாத்துடையார் அய்யனார் கோவிலின் ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசிதழில் பதிவு செய்து வெளியிட வேண்டும். மேலும், அனைத்து கிராமத்தின் சார்பில் நடைபெற உள்ள மேற்கண்ட சமத்துவ ஜல்லிக்கட்டு விழாவை தமிழக அரசின் சட்டத்திட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே, இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.