புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி...!


புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி...!
x

புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா,நேபாளம் ஆகிய நாடுகளில் இந்த தினம் புத்த ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பவுர்ணமியன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். இந்த ஆண்டு மே மாதம் 17ம் தேதி புத்த ஜெயந்தி விழா வருகிறது. இந்தியாவில் புத்த பூர்ணிமா நாளை பொது விடுமுறையாக அறிவிக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். ஆனால் அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, வைகாசி மாதம் முழு பவுர்ணமி நாளன்று புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிப்பது சாத்தியம் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story