காட்சி மண்டபத்தில் இரும்பு தடுப்பு உயர்த்தப்பட வேண்டும்-போலீஸ் கமிஷனரிடம் மனு
நெல்லை டவுன் காட்சி மண்டபத்தில் இரும்பு தடுப்பு உயர்த்தப்பட வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தினர் தலைவர் முகமது அய்யூப் தலைமையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் இருந்து வழுக்கோடைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின்போது இந்த காட்சி மண்டபத்தில் பல்வேறு விழாக்கள் நடைபெறும். பழமைவாய்ந்த இந்த காட்சி மண்டபம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வந்தன. சில நேரங்களில் கனரக வாகனங்கள் சரக்குடன் செல்லும்போது காட்சி மண்டபத்தில் உள்ள தூண்களில் உரசியதால் அவை சேதம் அடைந்தன. எனவே பழமை வாய்ந்த காட்சி மண்டபம் சேதம் அடைவதை தவிர்க்க கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையில் இரும்பினால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த தடுப்பு, உயரம் குறைவாக வைக்கப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் தலையை பதம் பார்க்கும் நிலை உள்ளது. மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் போது இந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தாழ்வாக உள்ளதால் நடந்து செல்பவர்களில் தலையில் இடித்து விடுகிறது. எனவே அந்த இரும்பு தடுப்பை எடுத்து சற்று உயரத்தில் வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.