மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x

மாணவர்கள் இடையே சமுதாய ரீதியாக மோதல் ஏற்படுவதை தடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை அருகே மூன்றடைப்பை அடுத்த கோவைகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட தலைவர் சுடலைக்கண்ணு, ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் சீனிதாஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

முன்னதாக அவர்கள் சிறிது தூரத்துக்கு முன்பாக, கட்சிக்கொடி, பேனர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். இதையொட்டி அங்கு மாவட்ட ஆயுதப்படை துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அங்கு கட்சிக்கொடி, பேனர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், கோஷங்கள் எழுப்பக்கூடாது என்றும் போலீசார் தடை விதித்தனர். தொடர்ந்து சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.

அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், 'நெல்லை அருகே மருதகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவரை, அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு சமுதாய மாணவர்கள் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த மாணவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மொத்தம் 7 மாணவர்கள் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் ஒரு மாணவர் மீது மட்டுமே மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து உள்ளனர். எனவே மீதமுள்ள மாணவர்கள் மீதும் வழக்குப்பதிந்து, உடனடியாக அவர்களையும் கைது செய்ய வேண்டும். அந்த பள்ளியில் பாதுகாப்புக்கு நிரந்தரமாக காவலரை நியமிக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் சமுதாய ரீதியாக மோதல்போக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கல்வித்துறை, காவல் துறை இணைந்து பெற்றோரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story