பார்வையற்ற பெண் கலெக்டரிடம் மனு
பார்வையற்ற பெண் கலெக்டரிடம் மனு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி பரமேஸ்வரி(வயது 45). கண் பார்வையற்றவரான இவர் நேற்று முன்தினம் தனது அக்காள் செல்வி(50), மகள் ரம்யா(11), மகன் கமலேஷ்(8) ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் மோகனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு செல்வி, மீனா என்ற 2 சகோதரிகளும், பழனி என்ற சகோதரரும் உள்ளனர். எனது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். ஆற்காடு வீரமடைக்கு செல்லும் வழியில் எனது தந்தை தண்டபாணி பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலத்தை பெண் பிள்ளைகளான எங்கள் 3 பேருக்கும் சம பங்காக பிரித்துக்கொடுக்காமல் எனது சகோதரர் பழனியே அனுபவித்து பயிர் செய்து வருகிறார். எனக்கு 2 கண்களும் தெரியாது. எனது கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வருவதால் எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. 2 பிள்ளைகளையும் படிக்க வைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு சேர வேண்டிய சொத்தை சம பங்காக பிரித்து தரும்படி கேட்டால் எனது சகோதரர் பழனி, கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற கலெக்டர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.