தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்- கலெக்டரிடம் கோரிக்கை மனு


தட்டுப்பாடு இல்லாமல்  விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்-  கலெக்டரிடம் கோரிக்கை மனு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் மகசூல் பாதிப்பை தடுக்க விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் டி.ஏ.பி. உரம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மகசூல் பாதிப்பை தடுக்க விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் டி.ஏ.பி. உரம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் வரும் புரட்டாசி ராபி பருவத்தில் விதைப்பு செய்ய நிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மகசூல் சரியாக இல்லாமல் விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை இந்த ஆண்டு ஈடு செய்யலாம் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் விதைப்புக்கு முன்பு அடி உரமாக டி.ஏ.பி. இடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக டி.ஏ.பி உரம் தட்டுப்பாடு இருந்தது. இந்த ஆண்டாவது தட்டுப்பாடு வராமல் முன்கூட்டியே கொள்முதல் செய்து தயாராக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

பயிர்கள் சேதம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், துணைத்தலைவர்கள் டி.சீனிவாசன், நம்பிராஜன் ஆகியோர் தலைமையில் பேய்குளம் பகுதி விவசாயிகள் கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலுக்கும், தென்காலுக்கும் பொதுப்பணித்துறையினர் மாற்றி, மாற்றி தண்ணீர் திறந்து விடுகின்றனர். அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் வடகாலுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வடகாலுக்கு தண்ணீர் வழங்காமல் வேறு பகுதிக்கு தண்ணீர் கொடுத்து வருகின்றனர். இதனால் வடகால் போய்குளம் பாசனத்தில் உள்ள நெல், வாழை பயிர்கள் கருகி வருகின்றன. குறிப்பாக பேய்குளம் 7, 8, 9, 10 பாசன மடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுத்து பேய்குளம் பாசன பகுதிகளுக்கு, குறிப்பாக 7, 8, 9, 10 பாசன மடை பகுதிகளுக்கு 10 நாட்கள் தண்ணீர் கிடைத்திட ஆவண செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் 22-ந் தேதி உண்ணாவிரதம், 29-ந் தேதி சாலைமறியல், ஆகஸ்டு 1-ந் தேதி முதல் காத்திருக்கும் போராட்டம் என தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம், என்று கூறி உள்ளனர்.

நரிக்குறவர்கள்

கோவில்பட்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் பி.கலியமூர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் கோவில்பட்டி பஸ் நிலையத்தின் உள் பகுதியில் ஊசி, மணி, பாசி போன்ற பொருட்களை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் எங்களை பஸ் நிலையத்துக்குள் வியாபாரம் செய்யக்கூடாது என்று தடுத்து உள்ளனர். எனவே, தாங்கள் தலையிட்டு நாங்கள் தொடர்ந்து கோவில்பட்டி பஸ் நிலையத்தில் ஊசி, மணி, பாசி போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். மேலும் மற்ற மாவட்டங்களில் உள்ளது போல எங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

வெள்ளத்தடுப்பு

காயல்பட்டினம் சமூகநீதி பேரவை செயலாளர் எம்.என்.அஹமது சாஹிபு தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது காயல்பட்டினத்தில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். எனவே, இந்த ஆண்டு பருவமழை தொடங்கும் முன்பே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து செய்ய வேண்டும், என்று கூறி உள்ளனர்.

இந்து முன்னணி

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கையில் தேசிய கொடிகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தகம், வணிகம், தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தகுந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்பவர்கள், மக்களை தூண்டுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் பிரசாரங்களை முறியடித்து ஆலையை திறக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

ஆஷ்துரை மணிமண்டபம்

தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க மாநில இணைச் செயலாளர் பி.ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள ஆஷ்துரை நினைவு மண்டபத்தை புதுப்பிக்க மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதுப்பிக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும், என்று கூறி உள்ளனர்.


Next Story