கொடிவேரி அணை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்- விவசாயிகள் கலெக்டருக்கு மனு

கொடிவேரி அணை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டருக்கு மனு அளித்தனர்.
கடத்தூர்
கொடிவேரி அணை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டருக்கு மனு அளித்தனர்.
விலை நிர்ணயம்
தடப்பள்ளி, அரக்கன் கோட்டை மற்றும் பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சுபி. தளபதி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கொடிவேரி அணை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல் நடவு செய்து களை எடுப்பு முடிந்து தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 2022-2023-ம் ஆண்டுக்கான நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்துள்ளது. அதன்படி மோட்டாரகத்துக்கு 20 ரூபாய் 40 காசும், சன்னரகத்துக்கு 20 ரூபாய் 60 காசும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 அதிகமாகும்.
ஊக்கத்தொகை
இந்த நிலையில் மோட்டா ரகத்துக்கு ரூ.1-ம், சன்ன ரகத்துக்கு 75 காசும் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மோட்டாரகத்துக்கு 21 ரூபாய் 15 காசும், சன்ன நகரத்துக்கு 21 ரூபாய் 60 காசும் விவசாயிகளுக்கு கொள்முதல் விலை கிடைக்கும்.
விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவரும் நெல் பதர் நீக்குதல், எடை போடுதல், முத்திரையிட்டு தையல் இடுதல், அட்டி இடுதல், லாரிகள் ஏற்றுதல் மற்றும் மின்சார கட்டணம், பில் இடுதல், கொள்முதல் தொகையினை வங்கி வழியாக விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்தல், மேலாண்மை பாதுகாப்பு காவலர் என சில செலவினங்களுக்காக 40 கிலோ சிப்பத்திற்கு சுமார் 20 ரூபாய் அரசு கொடுக்கிறது.
நேரடி கொள்முதல் நிலையம்
எனவே இந்த தொகைக்கு மேல் 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு விவசாயிகளிடம் அதிக தொகையினை பெறுவதில்லை என்பதை முகவரான தமிழ்நாடு நுகர்வோர்கள் வாணிப கழகம் உறுதிசெய்ய வேண்டும். மேலும் அட்டி இடுதலுக்கான மரக்கட்டைகள், தார்பாய்கள், பழுது இல்லாத பதர் நீக்கும் எந்திரம், லாரிகள் ஆகியவற்றை உடனடியாக தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
கொள்முதல் செய்யும் இடங்களை தேர்வு செய்தல், பருவ கால பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், காவலாளிகள் நியமனம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் 8-ந் தேதி (இன்று) முதல் கொடிவேரி அணை பாசன பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்திட ஈரோடு மாவட்ட மண்டல மேலாளர் நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.