கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி வேண்டும்
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மார்ச் 3,4-ந் தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு 1974 கச்சத்தீவு ஒப்பந்தம் 5-வது சரத்தின் படி, பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் குடும்பத்துடன் கலந்து கொள்வதற்கான தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் பாம்பனில் நாட்டுப்படகு சங்க தலைவர் ராயப்பன் தலைமையில் நடந்தது. இதில் கச்சத்தீவு திருவிழாவில் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் குடும்பத்துடன் 25 படகுகளில் 450 பேர் சென்று கலந்துகொள்வது, படகு ஒன்றுக்கு அரசு 100 லிட்டர் டீசல் வழங்க வேண்டும், கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகுகள் சென்றுவர ஏற்பாடு, பாதுகாப்புகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ராயப்பன் தலைமையில் ஏராளமான மீனவர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.