அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்புகிராம மக்கள் கலெக்டரிடம் மனு


அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்புகிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x

நாமக்கல் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

கலெக்டரிடம் மனு

நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மரூர்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டியில் அருந்ததியர் தெரு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 4 தலைமுறையாக வசித்து வருகின்றன. கடந்த 2006-ம் ஆண்டு எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

கரட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக கோவில் முன் பந்தல் அமைத்தோம். அப்போது ஒரு சிலர் வந்து தடுத்ததுடன் இப்பகுதி எங்களுக்கு பாத்தியப்பட்டு உள்ளது. அதனால் கோவிலை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் உதவியுடன் பந்தல் அமைத்தோம்.

எங்கள் பகுதியை சுற்றி உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இது குறித்து, வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, எங்கள் கோவிலுக்கு பட்டா வழங்குவதுடன், அடிப்படை வசதிகளையும் செய்துத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மாணவியை உயிருடன் மீட்க வேண்டும்

இதேபோல் மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர், உறவினர்களுடன் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெரிய மகளுக்கு 15 வயதாகிறது. அவள் அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி முதல் அவளை காணவில்லை. இது குறித்து மோகனூர் போலீஸ் நிலையத்தில், மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தோம். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் இதுவரை எங்கள் மகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, எங்கள் மகளை உயிருடன் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் எங்கள் மகளின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.


Next Story