15 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.


15 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கூறி 15 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம்

பெரியபட்டினம் அருகே உள்ள சக்திபுரம் பகுதியை சேர்ந்த கதிரவன் தரப்பை சேர்ந்த 15 குடும்பத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் கோவில் வரி கட்டுவது தொடர்பாக எங்களின் உறவினர் கற்பககுமார் தரப்பினருக்கும், ஊர் நிர்வாகிகளுக்கும் தகராறு உள்ளது. இந்நிலையில் கற்பககுமார் மகள் திருமண விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், மீறி கலந்து கொண்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவதாகவும் எச்சரித்தனர். இதனை மீறி கலந்துகொண்ட 15 குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர்.

எங்களது குடும்ப நிகழ்ச்சிகளில் யாரும் கலந்து கொள்ள கூடாது என்றும், ஊரில் உள்ள கடைகளில் பொருட்கள் வழங்க கூடாது என்றும், பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க கூடாது என்றும் கிராம நிர்வாகிகள் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதால் தாங்கள் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை.

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். ரூ.5 ஆயிரம் அபராதமும், ஊர்க்காரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும், உடனடியாக இதனை செய்யாவிட்டால் அபராத தொகை இரட்டிப்பாகும் என்று கூறியுள்ளனர். எனவே, எங்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு நிம்மதியாக ஊரோடு வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார்.

1 More update

Next Story