வீட்டுமனைப்பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டியை சேர்ந்த மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் தலைமையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-நார்த்தம்பட்டி அருந்ததியர் குடியிருப்பில் வாழும் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய எங்களுக்கு ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் குடிசை அமைத்து குடியேறி வந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது வீட்டு மனை பட்டா வழங்கிய இடங்கள் எடுக்கப்பட்டதால் 52 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்கத்தினால் வீட்டுமனைகளை இழந்த நார்த்தம்பட்டி அருந்ததியர் மக்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.