அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டக்கோரி கலெக்டரிடம் மனு


அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டக்கோரி கலெக்டரிடம் மனு
x

மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதால் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

அரியலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார்.

இதில் அரியலூர் மாவட்டம் கா.அம்பாப்பூர் காலனி தெருவை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் நாங்கள் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென்று நிலம் கிடையாது. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது கூட்டு குடும்பமாக வசித்து வருவதால் இட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அதில் அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம், என கூறியுள்ளனர்.

கல்வித்திறனை மேம்படுத்த...

பள்ளிக்கல்வி மற்றும் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 75 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமும், ஊரில் உள்ள தன்னார்வலர்கள் மூலமும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரும் ஆண்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். இதேபோல் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில் கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 286 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டது.

உடனடி நடவடிக்கை

தொடர்ந்து கூட்டத்தில் ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு கை ஊன்றுகோல் மற்றும் காலணி வழங்கக்கோரி மனு கொடுத்ததன் அடிப்படையில் கலெக்டர் துரித நடவடிக்கையால் அந்த மாற்றுத்திறனாளிக்கு உடனே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரூ.6,000 மதிப்பில் எல்போ ஊன்றுகோலும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 ஆயிரத்து 600 மதிப்பில் முடநீக்கு சாதனங்களும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கலைவாணி உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story