தென்காசியில் தொழில் முதலீட்டு கழக வங்கி அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு
தென்காசியில் தொழில் முதலீட்டு கழக வங்கி அமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்ட கலெக்டரை, தென்காசி மாவட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் அன்பழகன், ஆலோசகர் திருராமன், செயலாளர் லட்சுமி ஆனந்த், பொருளாளர் ஏ.கே.எஸ்.ராஜசேகர், இணைச் செயலாளர் சரவணகுரு, நிர்வாகக்குழு உறுப்பினர் செய்யது அலி பாதுஷா மற்றும் கீழப்பாவூர் வட்டார நவீன அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாஸ்கர், வெண்ணிநாடார் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் சிட்கோ தொழிற்பேட்டையை தூத்துக்குடி, கொல்லம் 4 வழிச்சாலைக்கு அருகில் ஆலங்குளம் பகுதியில் அமைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். தென்காசி கடையம் சாலையில் எல்.டி. தொழில் பூங்கா அமைத்திட வேண்டும். மரஅறுவை ஆலைகள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு என்று தனித்தனியாக தொழிற்பூங்கா அமைத்திட வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வங்கியை உடனடியாக தென்காசியில் அமைத்திட வேண்டும். முறையாக லைசென்ஸ் பெற்று, ஓடு, தளஓடு, செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சூளைகளுக்கு அவற்றின் தேவைக்கு ஏற்றவாறு களிமண் எடுக்க அனுமதிச்சீட்டு கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் லைசென்ஸ் புதுப்பிக்கவும், புதிய தொழில ்முனைவோருக்கு தொழிற்சாலைகளுக்கென அனைத்து விதமான அனுமதிகளையும் ஒற்றை சாளர முறையில் மாவட்ட நிர்வாகம் மூலம் பெற்றத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை பிற்படுத்தப்பட்ட ஒன்றியங்களாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் வசதி ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.