நெல்லை டவுனில் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி மேயரிடம் மனு
நெல்லை டவுன் ரத வீதியில் பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்கத்தினர் தலைவர் முகமது அய்யூப் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை டவுன் மேல ரதவீதி போலீஸ் நிலையத்திற்கு எதிரே மாநகராட்சி இலவச கழிப்பிடம் உள்ளது. இதில் ஒரு பகுதி வழியாக ஆண்கள் பயன்பாட்டுக்கும், மற்றொரு வழியாக பெண்கள் பயன்பாட்டிற்கும் வசதி செய்யப்பட்டு இருந்தன.
கடந்த சில மாதங்களாக பெண்கள் செல்லும் வழி அடைக்கப்பட்டு கழிவறையை பெண்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பஸ்களுக்காக காத்திருக்கும் பெண்கள் இந்த கழிப்பறையை தான் பயன்படுத்தி வந்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வருகின்ற பெண்களும், போலீஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருபவர்களும் இதைத்தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த கழிப்பறை பூட்டப்பட்டிருப்பதால் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மூடி கிடக்கும் பெண்களுக்கான கழிவறையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பாளையங்கோட்டை போலீஸ் காலனி சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் 5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் மற்றும் உறவினர்களுடன் வந்து கொடுத்த மனுவில், நான் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. எனது தாய்க்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. எங்கள் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. நான் பி.ஏ. படித்துள்ளேன். எனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருதி எனக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தெருவிளக்கு, குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்று சிவந்திப்பட்டிசாலை சாய் பாலாஜி கார்டன் குடியிருப்பு மக்கள் மனு கொடுத்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு நடந்த பேரணியின்போது போலீஸ் தடியடிப்பட்டு விக்னேஷ் உள்பட 17 பேர் இறந்தனர். இவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நினைவு தூண் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தாமிரபரணியில் உயிரிழந்த போராளிகளின் தியாகத்தை போற்றும் விதமாக போராளிகள் உயிரிழந்த நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு மாஞ்சோலை தியாகிகள் நினைவுபாலம் என பெயர் சூட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.