அரசு மருத்துவமனை கட்ட வலியுறுத்தி மனு
அரசு மருத்துவமனை கட்ட வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இதில், ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கிராம வறுமை ஒழிப்பு சங்க பொறுப்பாளர்களை மாற்றுவது தொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் பி.எல்.எப்., வி.பி.ஆர்.சி.யின் மாதாந்திர கூட்டம், பொதுக்குழு கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. குழுக்களின் வரவு, செலவு கணக்குகளை பொதுக்குழுவிலும், கிராம சபை கூட்டத்திலும் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறவில்லை. பி.எல்.எப்., வி.பி.ஆர்.சி. குழுக்களுக்கு அரசு மானியத்தில் வழங்கக்கூடிய உழவு எந்திரம், களை எடுக்கும் எந்திரம், மருந்து தெளிக்கும் எந்திரம் ஆகியவை கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்படுகிறது. ஆனால் வரவு, செலவுகள் குழுவிற்கு காட்டப்படுவதில்லை. பி.எல்.எப். பட்டியலில் வசதி படைத்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டு துறையிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஏரியை தூர்வார வேண்டும்
தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் முடிமன்னன் அளித்த மனுவில், ஆர்.எஸ்.மாத்தூரை அடுத்த நைனார்குடிகாடு கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும். ஆர்.எஸ்.மாத்தூர் சித்தேரியில் வண்டல் மண்ணை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.மாத்தூரில் உள்ள காஞ்சனா ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்.
அசான்வீரன் குடிகாடு ஊராட்சிக்கு கூடுதல் துப்புரவு பணியாளர் மற்றும் குப்பை வண்டிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் மேலும் பலர் மனு அளித்தனர்.