மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்


மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்
x

மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, கலெக்டர் அமர்குறஷ்வாஹா உத்தரவிட்டார்.

திருப்பத்தூர்

மக்கள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். வேளாண்மை, காவல், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகங்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 301 மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுதினார்.

அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 பேருக்கு ரூ.9.45 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், வாய்ப்பேச இயலாத, காதுகேளாத மற்றும் கண் பார்வையற்ற 24 நபர்களுக்கு ரூ.3.98 லட்சம் மதிப்பில் திறன்செயலியுடன் கூடிய கைப்பேசிகள், ஒருவருக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் மூளை முடக்குவாத நாற்காலி என மொத்தம் 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13.57 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தெரிவிக்க வேண்டும்

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த லில்லி என்பவர் அளித்த மனுவில் நான் கடந்த 2017-ஆம் ஆண்டு உதயேந்திரத்தில் சொந்தமாக இடம் வாங்கியுள்ளேன். நான் தற்போது இத்தாலியில் பணிபுரிந்து வருகிறேன். என்னுயை இடத்தில் என்னை வீடு கட்டக்கூடாது என அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் மிரட்டுகின்றனர். எனவே, நான் வீடு கட்ட காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கதறி அழுது மனு கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் உடன் வந்திருந்தனர்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், அரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story