கிருஷ்ணகிரிமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 318 மனுக்கள் குவிந்தன
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 318 மனுக்கள் குவிந்தன.
318 மனுக்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 318 மனுக்களை வழங்கினர்.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் சார்பில் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்த் நகரை சேர்ந்த மித்ரா என்ற திருநங்கைக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அலுவலர் கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் பத்மலதா, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையத் அலி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.