தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு


தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தையல் கடை

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவண்ணாமலை சாலை ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 32). ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர். இவர் டிஜிட்டல் சேவா மையம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் வெங்கடாசலபதி என்பவர் தையல் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடாசலபதி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவு அந்த தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதுதொடர்பாக வெங்கடாசலபதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அறிந்த சந்திரசேகர் அங்கு சென்று பார்த்தார். பின்னர் அவர் இது குறித்து பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் குண்டு வீச்சு

நான் ராமர் கோவில் அருகில் டிஜிட்டல் சேவா மையம் சேஷா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் கடை வைத்து தொழில் செய்து வருகிறேன். மேலும் நான் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாகவும், தற்போது நகர் சேவா பிரமுக் என்ற பொறுப்பிலும் இருந்து வருகிறேன்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு என்னுடைய கடைக்கு அருகில் உள்ள தையல் கடை மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அடங்குவதற்குள் தற்போது தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story