பஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு


பஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:45 PM GMT)

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

விழுப்புரம்

விக்கிரவாண்டி

போலீஸ் பாதுகாப்பு

கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் ஒருவர் பலியானார். தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அந்த வகையில் பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்ட்ராங், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், ஏட்டுகள் மேகநாதன், சுரேஷ், பிரபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பெட்ரோல் குண்டு வெடித்தது

அப்போது பஸ் நிலையத்தின் உள்ளே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே சாலையில் பெட்ரோல் குண்டு ஒன்று விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது புதிய கட்டிடத்தின் மாடியில் இருந்து மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதை கவனித்த போலீசார் அவரை விரட்டி பிடித்தனர்.

வாலிபர் கைது

விசாரணையில் அவர் விக்கிரவாண்டி வாணியர் வீதியை சேர்ந்த காத்தவராயன் மகன் பாலு(வயது 39) என்பதும், 20-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தொியவந்தது. தீபாவளி என்பதால் பொதுமக்கள் பட்டாசு வெடிக்கிறார்கள். அதுபோல வெடிப்பதற்காக அவர் மதுபோதையில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து பாலு மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு வெடித்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story