தூத்துக்குடியில் பா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆம்னி பஸ்
பா.ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவராக இருப்பவர் விவேகம் ஜி.ரமேஷ். இவருக்கு சொந்தமான ஆம்னி பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10.25 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
அந்த ஆம்னி பஸ் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழே இணைப்பு சாலையில் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென மேம்பாலத்தில் இருந்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை ஆம்னி பஸ்சை நோக்கி வீசினர்.
ஆனால், அந்த பெட்ரோல் குண்டு ஆம்னி பஸ் மீது படாமல் பஸ்சின் முன்பு சாலையில் விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறியடித்து பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள். இதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
போலீசார் விரைந்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதியை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.
மேலும் மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். மாநகரில் முக்கிய இடங்களில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவான காட்சிகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
அதன்படி, புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு இடையே சிறிது நேரம் தாமதமாக அதே பஸ்சில் பயணிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பா.ஜனதா நிர்வாகியின் ஆம்னி பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.