பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி:நெகமத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி:நெகமத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
நெகமம்
பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சரக்கு வாகனம் மற்றும் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பொள்ளாச்சியில் இருந்து நெகமம் வழியாக பல்லடம், திருப்பூர் செல்லும் அனைத்து வாகனங்களும் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நெகமம் போலீசார் சார்பில் சோதனைச்சாவடி அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் மற்றும் போலீசார் தலைமையில் போலீசார் துப்பாக்கி ஏந்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் வடசித்தூர், போளிகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






