சேலத்தில் பரபரப்பு: தண்ணீர் கலந்த பெட்ரோல் வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வந்ததால் விநியோகம் நிறுத்தப்பட்டன.
சேலம்:
சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், வாலிபர் ஒருவர் இன்று தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினார். அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர் மெக்கானிக்கிடம் காண்பித்தார். அவர் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை சோதனையிட்ட போது அதில் தண்ணீர் கலந்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு சென்று தண்ணீர் கலந்த பெட்ரோல் வந்து உள்ளது என்று கூறினார். பங்க் ஊழியர்கள் சோதனை நடத்திய போது மழை நீர் பெட்ரோலில் கலந்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து மற்ற வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டன. இதனால் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும், அங்கிருந்து வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.