மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பல்லடத்தில் ஓடை அருகே மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பல்லடத்தில் ஓடை அருகே மயானம் அமைக்க எதிர்ப்புதெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மயானம்
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார்.
பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், பல்லடம் நகராட்சி சார்பில் பச்சாபாளையத்தில் ஓடையில் நவீன எரியூட்டும் மயானம் அமைக்க உள்ளனர். ஏற்கனவே தன்னார்வ அமைப்பினர் நவீன மின் மயானம் அந்த ஓடைக்கரையோரம் அமைக்க முயன்ற போது நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காமல், தற்போது அனுமதி அளிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளி அருகே உள்ளது. குடியிருப்புகளும் அதிகம் உள்ளன. எனவே எரியூட்டும் மயானத்தை ஓடை அருகே அமைக்கக் கூடாது. என்று கூறியுள்ளனர்.
அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், 'மாற்றுத்திறனாளிகள் 250 பேர் மிகவும் வறுமையில் உள்ளோம். கடும் ஊனமுற்றோர் பிரிவில் சேர்த்து எங்களின் வாழ்வாதாரத்தை காக்க முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நாங்கள் தயாரிக்கும் பொருட்களை அரசே கொள்முதல் செய்து அரசு அலுவலர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அரசு குடியிருப்புகளில் எங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
மண் துகள்கள்
ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையில் அளித்த மனுவில், தாராபுரம், காங்கயம், ஊதியூர், குண்டடம், ஊத்துக்குளி, அவினாசி, பல்லடம் என பல பகுதிகளில் கிராவல் மண், எம்.சாண்ட் மணல்மற்றும் செங்கல் போன்ற பொருட்களை திறந்த வெளியாக டிப்பர் லாரிகளில் எடுத்து செல்கிறார்கள். பிரதான சாலையில் செல்லும்போது பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண், செங்கல் துகள்கள் பட்டு பல விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் தார்ப்பாய் போட்டு மூடி கொண்டு செல்ல வேண்டும். என்று கூறியுள்ளனர்.
பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், 'கரைப்புதூர் ஊராட்சி பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கணபதிபாளையம், அல்லாளபுரம் பள்ளிக்கு செல்கிறார்கள். இந்த வழியாக இயங்கி வந்த 38-ம் எண் பஸ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது வரை பஸ் இயக்கப்படாமல் உள்ளது. எனவே 38-ம் எண் பஸ்சை பாச்சாங்காட்டுப்பாளையம் வழியாக அருள்புரம் ஆரம்ப சுகாதார நிலையம் வரை இயக்க வேண்டும். என்று கூறியுள்ளனர்.
கோவில் வழிபாடு
பல்லடம் உகாயனூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி அளித்த மனுவில், 'மாதப்பூர் கிராமம் கள்ளக்கிணரில் எனது தந்தை பெயரில் வீடுகளுடன் கூடிய பொது சொத்து உள்ளது. இந்த வீட்டை அருகில் உள்ள தனியார் ஒருவர் இடித்து விட்டு வீடு கட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் சார்பில் அளித்த மனுவில், 'பொங்குபாளையம் கிராமத்தில் ஒருபிரிவு மக்களின் குலதெய்வம் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்தநிலையில் சிலர் கோவில் வழிபாட்டை தடுக்கிறார்கள். ஆடி அமாவாசை அன்று கோவிலில் வழிபடவும், பூஜை செய்யவும், ஆடு, கோழி பலியிடவும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.