அதிநவீன தொழில்நுட்பத்துடன் மருந்து ஆய்வகம்


நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்து ஆய்வகம் மதுரையில் திறக்கப்பட்டு உள்ளது.

மதுரை

நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்து ஆய்வகம் மதுரையில் திறக்கப்பட்டு உள்ளது.

பரிசோதனை மையம்

இந்தியாவை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில், வேதிப்பொருள் அளவு அதிகரித்து ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் பலியாகினர். இந்த சம்பவத்தால் உலக சுகாதார நிறுவனம் மருந்து பொருள்களில் உள்ள வேதிப்பொருள்களின் அளவை கண்காணிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, மருந்து பொருட்களில் உள்ள வேதிப்பொருள்களின் அளவை பரிசோதிக்க தமிழகத்தில் தற்போது வரை மருந்து கட்டுப்பாட்டு துறையின் கீழ் ஒரேயொரு பரிசோதனை மையம் மட்டும் உள்ளது. இந்த மையமும் சென்னையில் செயல்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள், பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கின்றனர். இந்த மாதிரிகள் சென்னையில் உள்ள அரசு ஆய்வகம் அல்லது தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவும், நவீன தொழில்நுட்பம் ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் மதுரை கீழக்குயில்குடியில் நவீன மருந்துகள் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது.

நவீன கருவிகள்

ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்படையில் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நாட்டிலேயே அதிநவீன கருவிகள் மூலம் மருந்து பொருட்கள் சோதனை செய்யப்படும். சோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையிலான நவீன கருவிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 30 வகையான கருவிகளில் 10 வகையான கருவிகள் மதுரை வந்துள்ளன. இந்த கருவிகளுக்காக மட்டும் ரூ.6 கோடியே 70 லட்சம் செலவழிக்கப்படுகிறது.

இந்த ஆய்வகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள மருந்தகங்கள், மருந்து கடைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து மருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும்.

50 மருந்து உற்பத்தி நிறுவனங்கள்

இந்த ஆய்வகம் மதுரையில் செயல்பட தொடங்கினால், தென்மாவட்டங்களில் இருந்து மாதிரிகளை சோதனைக்கு அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், தென் மாவட்டங்களில் சுமார் 50 சிறிய, பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இங்கும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மாதிரிகள் சேகரித்து விரைவில் முடிவுகளை தெரிவிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், பொதுமக்களுக்கு உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத தரமான மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை கடந்த மாதம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story