2-வது நாளாக மருந்தாளுனர்கள் போராட்டம்
மதுரையில் 2-வது நாளாக மருந்தாளுனர்கள் போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று 2-வது நாளாக தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ வீதி தொகுப்பு முறைப்படி மருந்தாளுனர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும், வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக முறையான இட ஒதுக்கீடு நடைமுறையினை பின்பற்றி பணி நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் உள்ள 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மருந்தாளுனர்களுக்கு அரசாணைப்படி பணி வரன்முறை வழங்கிட வேண்டும். மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர், மருந்தியல் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்க தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.