மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி


மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை   ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2023 3:08 AM IST (Updated: 20 Oct 2023 3:09 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தாா்

ஈரோடு

மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி கூறினார்.

சுங்கச்சாவடி

ஈரோட்டில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு -கோபி நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சுங்கச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அந்த திட்டம் தயாரித்தபோது, அதையும் சேர்த்து தயாரித்துள்ளனர். பொதுமக்களின் வேண்டுகோளை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. ஆட்சியின் இறுதியில் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு தேர்தல் அறிவிப்பால், மானியத்தொகை விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

கோபியில் அண்ணாமலை பேசும்போது, தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகள் சரி இல்லை, திருப்தியாக இல்லை, என குற்றம் சாட்டி உள்ளார். எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் எங்களை பாராட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் மனசாட்சிக்கு திருப்தியாக வேலை செய்கிறோம். மக்கள் கொடுக்கும் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்.

அத்திக்கடவு -அவினாசி திட்டம்

பெருந்துறை சிப்காட்டில் உள்ள பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகரில் 10 ஆண்டுகளாக திட்டமிடல் சரியில்லாமல் பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது மாநகராட்சி, நெடுஞ்சாலை, மின்வாரியம், சாலை பராமரிப்பு போன்றவற்றை ஒருங்கிணைத்து மேற்கொள்வதால் பணிகள் சற்று தாமதம் ஆகிறது.

அத்திக்கடவு -அவினாசி திட்டம் தாமதமாக முக்கிய காரணம், திட்டம் தொடங்கியபோது முறையாக திட்டமிடப்படவில்லை. பல நிலங்களில் பிரச்சினை நீடித்ததால், அங்கு பணி செய்ய முடியவில்லை. தற்போது நாங்கள் பேசி தீர்வு கண்டு, நிலத்தை கையகப்படுத்தி ஒழுங்கு செய்துள்ளோம். தமிழகத்தில் ஏழைகள், ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடையை நடத்துகின்றனர் என்றும், தி.மு.க. அமைச்சர்கள் தான் மது ஆலைகளை நடத்துவதால் மதுக்கடைகளை மூட மாட்டார்கள் என்றும் அண்ணாமலை பேசி வருகிறார். அப்படி எந்த எண்ணமும் இல்லை. அரசின் வருவாய்க்காக, கடை நடத்தப்படவில்லை. முதல் -அமைச்சர் பேசும்போது, 'டாஸ்மாக் கடையை படிப்படியாக குறைப்போம்' என கூறி உள்ளார். ஏற்கனவே 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. யாருக்கும் மதுக்கடையை நடத்த வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் இல்லை. ஆனால் திடீரென மூடிவிட முடியாது. எனவே, மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

40 கடைகள்

மேலும் மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். புதிதாக மதுகுடிக்க வரும் இளைஞர்களை, மதுக்கடைக்காரர்கள் அழைத்து கவுன்சிலிங் கொடுத்து மாற்றினால், சம்பந்தப்பட்ட மதுக்கடைக்காரர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை தெரிவித்துள்ளோம். இந்த பழக்கத்தில் இருந்து விடுபட நாங்கள் எடுக்கும் நடவடிக்கையை அவர்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.

டாஸ்மாக் பணியாளர்களின் குறைகளை தீர்க்கவும், டாஸ்மாக் கடையின் வாடகை, மின் கட்டணத்தை நேரடியாக தலைமை அலுவலகத்தில் இருந்து செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடம், கோவில் உள்ளிட்ட 40 இடங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை வந்துள்ளது. அவற்றை மூடிவிட்டு, பிரச்சினை இல்லாத இடத்துக்கு மாற்றவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.


Next Story