சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கையில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
புகைப்பட கண்காட்சி
தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கண்காட்சியை திறந்து வைத்து பேசியதாவது:-
இந்தியாவின் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் பொருட்டு, மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அவர்கள் சார்ந்த புகைப்படங்களுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கடன் உதவி
இக்கண்காட்சியானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நாடு வல்லரசாக உள்ள நிலையில் அதற்கு அடிப்படை காரணம் நம் முன்னோர்கள் பெற்று தந்த சுதந்திரமே என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள இந்த கண்காட்சி உதவியாக இருக்கும். வீரம் விளைந்த சிவகங்கை மண்ணை சேர்ந்த வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி மற்றும் மருதுசகோதரர்கள் வாழ்ந்த இங்கு, மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பார்த்து பயன்பெற வேண்டும் என்றார்.
பின்னர், 71 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் மானிய தொகைக்கான ஆணை, 7 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.56.40 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
வேலை நிறுத்த போராட்டம்
இதில், மத்திய மக்கள் தொடர்பக மண்டல இயக்குனர் காமராஜ், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர், நிர்வாக பொறியாளர் ராமகிருஷ்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறுகையில், ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.