சீருடைப்பணியாளர் பணிக்கான முதல்கட்ட தேர்வில் தகுதி பெற்ற707 பேருக்கு உடல்திறன் தேர்வு தொடங்கியது
சீருடைப்பணியாளர் பணிக்கான முதல்கட்ட தேர்வில் தகுதி பெற்ற 707 பேருக்கு உடல்திறன் தேர்வு தொடங்கியது.
சீருடைப்பணியாளர் பணி
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வுப்பணிக்கான எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது உடல்தகுதி தேர்வு, உடல்திறன் தேர்வு நடந்து வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களுக்கு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் முதல்கட்டமாக உடல்தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த நிலையில் அதில் 707 பேர் தகுதி பெற்றனர்.
உடல்திறன் தேர்வு
இதனை தொடர்ந்து அவர்கள் 707 பேருக்கும் 2-ம் கட்டமாக உடல்திறன் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 350 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் அவர்கள் அனைவருமே கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் உத்வேகத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.
இத்தேர்வு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இத்தேர்வு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பத்குமார், கனகராஜ், பார்த்திபன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இத்தேர்வானது தொடர்ந்து, இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது.