2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான 2-ம் நிலை காவலருக்கான உடல்திறன் தேர்வு நடைபெற்றது. 400 பேருக்கு முதல்கட்டமாக நடந்த இந்த தேர்வில் 55 பேர் கலந்துகொள்ளவில்லை
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான 2-ம் நிலை காவலருக்கான உடல்திறன் தேர்வு நடைபெற்றது. 400 பேருக்கு முதல்கட்டமாக நடந்த இந்த தேர்வில் 55 பேர் கலந்துகொள்ளவில்லை
உடல்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ம் ஆண்டுக்கான போலீஸ் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களுக்கு உடல்திறன் மற்றும் உடல்தகுதி தேர்வு வருகிற 11-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 987 பேருக்கு இந்த உடல்தகுதி தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதல் நாளான நேற்று 400 பேர் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் நேற்று 55 பேர் கலந்து கொள்ளவில்லை. மீதம் உள்ள 345 பேருக்கு தேர்வு நடைபெற்றது.
சான்றிதழ் சரிபார்ப்பு
இவர்களுக்கு மார்பளவு, சான்றிதழ் சரிபார்த்தல், 1,500 மீட்டர் ஓட்டம் போன்றவை நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மார்பளவு, உயரம் சரிபார்த்தல், அதன்பின்னர் 1,500 மீட்டர் ஓட்டம் என படிப்படியாக அனுப்பப்பட்டனர். உடல்திறன் தேர்வினை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் நடத்தினர்.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற உடல்திறன் தேர்வினையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் தவிர யாரும் உள்ளே நுழையவோ, மைதானத்தை சுற்றியோ அனுமதிக்கப்படவில்லை. தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 987 பேருக்கும் உடல்திறன் தேர்வு நடைபெற்ற பின்னர் 9-ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கயிறு ஏறுதல், நீளம்தாண்டுதல், ஓட்டம் போன்ற உடல்தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது.