வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம்
வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் தமிழ்நாடு உயர்கல்வி மாநில மன்றம் சார்பில் 2 நாள் இயற்பியல் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிவனேசன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், காரைக்கால், திருவண்ணாமலை, சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுகள் குறித்து விளக்கி பேசினார்கள். கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைகளை பேராசிரியர்கள் மதிப்பீடு செய்தனர். இறுதியில் மாணவ-மாணவிகள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையில் முசிறி அரசு கலை கல்லூரியை சேர்ந்த மாணவி சவுந்தர்யா முதலிடத்தையும், அழகப்பா பல்கலைக்கழக மாணவி உஷா 2-ம் இடத்தையும், தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவி சுகன்யா 3-ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் ரமேஷ் குமார், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் விசுவநாதன், வேப்பந்தட்டை அரசுக்கல்லூரியின் தமிழ் துறை தலைவர் சேகர் மற்றும் பலர் விருதுகளை வழங்கினார்கள். முன்னதாக இயற்பியல் துறை தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். முடிவில் இயற்பியல் துறை கவுரவ பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார்.