தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல்; அ.தி.மு.க.வினர் 434 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல்; அ.தி.மு.க.வினர் 434 பேர் கைது
எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 434 பேர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி கைது
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை நியமிக்காததை கண்டித்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து சென்னையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சையில் மறியல்
அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று மதியம் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர் . பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பட்டுக்கோட்டை எஸ்.டி.எஸ்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாலை.ரவி, விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பிரத்தினசுந்தரம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கோபால், வார்டு செயலாளர் மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கலைவாணி, பொதுக்குழு உறுப்பினர் கவிதாகலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 75 பேரை கைது செய்தனர்.
434 பேர் கைது
இதே போல் தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 7 பெண்கள் உள்பட 434 பேர் கைது செய்யப்பட்டனர்.