பூச்செடிகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல்
கீரமங்கலத்தில் மல்லிகை, முல்லை பூ செடிகளை வெட்டி சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி ேநரம் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பூச்செடிகள் சேதம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரண்மனைக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சண்முகவடிவேல் (வயது 45). இவரது தம்பி செந்தில்வடிவேல். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை பூ செடிகள் நட்டு வளர்த்து பூ பறித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் உள்பட சிலர் மல்லிகை, முல்லை பூ செடிகளை அரிவாள் கொண்டு வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சாலை மறியல்
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சண்முகவடிவேல் புகார் கொடுத்துள்ளார். ஆனால் மாலை வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி விவசாயி சண்முகவடிவேல் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதைதொடர்ந்து அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், வடகாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.