காய்ச்சலுக்கு பலியான சிறுவன் உடலுடன் மறியல்
காய்ச்சலுக்கு பலியான சிறுவன் உடலுடன் உறவினர்களும், பெற்றோரும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருப்புவனம்,
சிறுவன் பலி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவந்திடல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். கொத்தனார். இவருைடய மகன் மதன்சிலம்பு (7). அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதற்காக திருப்புவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
நேற்று காய்ச்சல் அதிகமாகி அவனது உடல்நிலை மோசம் அடைந்தது. பின்னர் திருப்புவனத்தில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து வெளியே வந்தபோது சிறுவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் மதன் சிலம்புவை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவனது உடலை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மறியல்
பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால், பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சிறுவன் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுவனின் உடலை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சிறுவன் பலியான சோக சம்பவம் குறித்து கணேசன், பழையனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.