மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்மத்திய அரசை கண்டித்து 8 இடங்களில் மறியல் :755 பேர் கைது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்மத்திய அரசை கண்டித்து 8 இடங்களில் மறியல் :755 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மொத்தம் 755 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 7-ந் தேதி (அதாவது நேற்று) ரெயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சாலை மறியல்

அதன்படி, நேற்று தமிழகத்தில் ரெயில்மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. கள்ளக்குறிச்சியில் மாநில குழு உறுப்பினர் அமிர்தலிங்கம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி துருகம் சாலையிலிருந்து பேரணியாக நான்கு முனை சந்திப்பு வழியாக கச்சேரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இதன்மூலம், 100 பேர் கைதானார்கள். இவர்கள் அனைவரையும் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின் மாலையில் விடுவித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின்மணி, வட்ட செயலாளர் வேலாயுதம், மாவட்ட குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் தனலட்சுமி மற்றும் மணி, அருள்தாஸ், நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியல்

இதேபோன்று சின்னசேலம் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சின்னசேலம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர்.

இதற்கு வட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர்கள் பழனி, ராமசாமி, சுப்பிரமணியன், முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூவராகன் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார்.முன்னதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயிலில் தடுப்புக்களை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பேரணி ரெயில் நிலையம் அருகே வந்த போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 70 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில்தங்க வைத்தனர். கைதானவர்களில் 40 பேர் ஆண்கள் ஆவார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதில் மாதர் சங்க வட்ட செயலாளர் ஆனந்தி, வட்டக் குழு உறுப்பினர்கள் பாபு, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

755 பேர் கைது

இதேபோன்று மாவட்டத்தில் கரியாலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் அடுத்த குன்னத்தூர், களமருதூர், திருக்கோவிலூர், சங்கராபுரம் ஆகிய 6 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 755 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும்மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

1 More update

Next Story