பன்றி பண்ணை உரிமையாளர் கழுத்தை இறுக்கி படுகொலை-உறவினர் கைது
முக்கூடல் அருகே பன்றி பண்ணை உரிமையாளர் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
முக்கூடல்:
முக்கூடல் அருகே பன்றி பண்ணை உரிமையாளர் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
பன்றி பண்ணை உரிமையாளர்
நெல்லை அருகே முக்கூடல் ஹரிராம் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 76). இவர் முக்கூடல் அருகே அரியநாயகிபுரம் அணைக்கட்டுக்கு வடபுறத்தில் காட்டு பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வந்தார்.
எனவே, அவர் அங்கேயே குடிசை அமைத்து தனியாக தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் பன்றி பண்ணை வளாகத்தில் கட்டிலில் செல்லத்துரை இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
கழுத்தை இறுக்கி படுகொலை
அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து முக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
செல்லத்துரையின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி படுகொலை செய்யப்பட்டதற்கான தடயம் இருந்தது. காட்டு பகுதியில் பன்றி பண்ணையில் அவர் தனியாக வசித்ததை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் அவரை கழுத்தை இறுக்கி படுகொலை செய்தது தெரியவந்தது.
உறவினர் கைது
இதுகுறித்து செல்லத்துரையின் மகன் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்லத்துரையின் உறவினரான பாலகிருஷ்ணன் (32) என்பவர் செல்லத்துரையிடம் இருந்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
இறந்த செல்லத்துரைக்கு பூர்வீக ஊர், முக்கூடல் அருகே உள்ள தென்திருப்புவனம் ஆகும். முக்கூடல் அருகே பன்றி பண்ணை உரிமையாளரை உறவினரே கழுத்தை கயிற்றால் இறுக்கி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.