பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கும் கழிவுகள்


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கும் கழிவுகள்
x

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மூட்டை, மூட்டையாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மூட்டை, மூட்டையாக குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். இதை தவிர 300-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அரசு ஆஸ்பத்திரியின் கழிப்பிடம் முன் மூட்டை, மூட்டையாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பெய்த மழையின் காரணமாக மூட்டைகளின் அருகில் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் குப்பை மூட்டைகளால் கழிப்பிடத்தை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பைகளுடன் சேர்த்து மருத்துவ கழிவுகளை கொடுப்பதாக புகார் எழுந்து உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சுகாதார சீர்கேடு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் முன்வருவதில்லை. குப்பைகள் பல நாட்களாக மூட்டை, மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குப்பைகள் நீண்ட நாட்களாக தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏற்கனவே ஆஸ்பத்திரிக்கு நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் அழுகி சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கழிப்பிடம் முன் கொட்டப்பட்டு உள்ளதால் பெண்கள், வயதானவர்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் குப்பைகளை அகற்றவும், மருத்துவ கழிவுகளை குப்பைகளுடன் கொட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தரம் பிரிப்பதில்லை

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, குப்பைகள் தரம் பிரித்து மூட்டை கட்டி வைக்கப்பட்டு உள்ளது. நகராட்சி வாகனம் வராததால் தேங்கி உள்ளது. சப்-கலெக்டர் மூலம் நகராட்சிக்கு தெரிவித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி 100 கிலோவுக்கு மேல் கழிவு உற்பத்தி செய்வோர், அவர்களே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கழிவுகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் குப்பைகளுடன் ரத்தக்கறை படிந்த பஞ்சுகள், ஊசிகளும் வருகிறது. மேலும் உணவு கழிவுகளை அதிகமாக கொட்டுகின்றனர். எனவே தரம் பிரித்து முறையாக குப்பைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story