குவிந்து கிடக்கும் அரசின் இலவச பொருட்கள்


குவிந்து கிடக்கும் அரசின் இலவச பொருட்கள்
x
தினத்தந்தி 12 March 2023 6:45 PM GMT (Updated: 12 March 2023 6:45 PM GMT)

விழுப்புரம் சமுதாய நலக்கூடத்தில் குவிந்து கிடக்கும் அரசின் இலவச பொருட்கள் வீணாகி வருவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் பின்புற பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் கடந்த 2010-11-ம் ஆண்டு அப்போதைய விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இது திறக்கப்பட்டு சில மாதங்களே மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் திடீரென பூட்டப்பட்டது. அதன் பிறகு இந்த சமுதாய நலக்கூடத்தை பராமரித்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எந்தவொரு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த சமுதாய நலக்கூட கட்டிடம் அரசின் இலவச பொருட்களை வைக்கும் குடோனாக மாறிவிட்டது. இந்த கட்டிடத்திற்குள், கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச கலர் டி.வி. மற்றும் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை தற்போது யாருக்கும் பயன்பாடின்றி போட்டு வைத்துள்ளதால் அவை சேதமடைந்து வீணாகி வருகின்றது. எனவே அரசின் இலவச பொருட்களை ஏலம் விட்டு அந்த தொகையை அரசு நிதியில் சேர்க்கலாம் அல்லது அரசு மருத்துவமனைகள், அரசு காப்பகங்களில் ஒப்படைக்கலாம். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?


Next Story