பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்


பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
x

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி உடுமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ச ாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர்

தளி

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி உடுமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ச ாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலை வெங்கடாசலபதியும், உற்சராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

கோவில் வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை யொட்டி ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே வாகனங்களில் வருகை தந்தனர். பின்னர் விடிய விடிய பெருமாள் பாடல்களை கேட்டவாறு பயபக்தியுடன் மலையேறிச் சென்று வரிசையில் நின்று ஏழுமலையானை வழிபட்டனர்.

சிறப்பு பஸ்கள்

மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் மற்றும் அமராவதி போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று உடுமலை பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவில், பெரிய கடை வீதி நவநீதகிருஷ்ணன் கோவில் மற்றும் நெல்லுக்கடை வீதி சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story