இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:45 PM GMT)

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை செய்திருந்தார்.

மேலும் தென் மாவட்ட பகுதிகளான தூத்துக்குடி, சங்கரன்கோவில், கழுகுமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக வந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story