மாரியம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்


மாரியம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

திருச்சி

திருச்சி, பெரியமிளகுபாறையில் உள்ள புத்தடிமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கிய இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட ஊர்வலம் நேற்று காலை நடந்தது. காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், தீச்சட்டி ஏந்தியபடி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

இதேபோல் முதலியார்சத்திரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கிய இந்த விழாவில் நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜைகள் நடந்தன. இந்நிலையில் நேற்று காலை பால்குட ஊர்வலம் நடந்தது. காவிரி ஆறு அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், இளநீர் காவடி, பறவை காவடி, தீச்சட்டி, அலகு காவடிகளுடன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது.


Next Story