அமணலிங்கேசுவரர் கோவிலில் ஆவணிமாத அமாவாசை விழா

அமணலிங்கேசுவரர் கோவிலில் ஆவணிமாத அமாவாசை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தளி
திருமூர்த்தி மலை அமணலிங்கேசுவரர் கோவிலில் ஆவணி மாத அமாவாசை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அமணலிங்கேசுவரர் கோவில்
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், கன்னிமார், சுப்பிரமணியர், நவகிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலில் அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை, சிவராத்திரி, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மும்மூர்த்திகளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சலிங்க அருவி
திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்ற பக்தர்கள், பொதுமக்கள் பஞ்சலிங்க அருவியில் குறித்து விட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கமாக நடைமுறையாகும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து குறைந்து விட்டது.இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மழைப்பொழிவை எதிர்பார்த்து உள்ளனர்.






