பில்லூர் 3-ம் குடிநீர் திட்ட சோதனை ஓட்டம்
பில்லூர் 3-ம் குடிநீர் திட்ட சோதனை ஓட்டம்
கோவை
பில்லூர் 3 குடிநீர்த்திட்டப் பணிகளை விரைவில் முடித்து, அடுத்த மாதம் சோதனை ஓட்டம் மேற்கொள்ள தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கழகத் தலைவர் நீரஜ் மித்தல் அறிவுறுத்தியுள்ளார்.
பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்
கோவை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக பில்லூர் 3 குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.779 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை, மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் கட்டுமானப் பணிகள், குடிநீர்க் குழாய் பதித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நீரஜ் மித்தல், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் நேற்றுஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் பில்லூர் 3 திட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகளின் தரமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கட்டன்மலை பகுதியில் 900 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் சோதனை ஓட்டம்
சுரங்கப் பகுதியில் குடிநீர்க்குழாய் பதிக்கும் பணி விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முருகையன் பரிசல்துறை பகுதியில் இருந்து பன்னிமடை வரை 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை விரைவில் முடித்து அடுத்த மாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் மேற்கொள்ள தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் நீரஜ் மித்தல்ல் அறிவுறுத்தியுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) செல்லமுத்து, நிர்வாகப் பொறியாளர் செந்தில்குமார், உதவி நிர்வாகப் பொறியாளர் பட்டன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.