வண்டல் மண்படிந்து கிடக்கும் பில்லூர் அணை


வண்டல் மண்படிந்து கிடக்கும் பில்லூர் அணை
x
தினத்தந்தி 19 Jun 2023 3:30 AM IST (Updated: 19 Jun 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

வண்டல் மண்படிந்து கிடக்கும் பில்லூர் அணை தூர்வாரப்படுமா? என்பது அனைத்துதரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கோயம்புத்தூர்

பச்சைமலைக்குள் படுத்துறங்கும் பகுதிதான் நீலகிரி. இங்கிருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து உருவாகி ஓடிவரும் சிற்றோடைகள்தான் சங்கமித்து பல்வேறு ஆறுகளாக வீறு நடைபோட்டு அணைக்கட்டுகளுக்குள் அடைக்கலம் புகுந்து, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.

ஆம்....நீலகிரியில உள்ள அப்பர் பவானி வனப்பகுதியில் புளியமலை, நாடுகாணிமலை, மடிப்பு மலை, கிங்குருண்டி மலை மற்றும் வெஸ்டர்ன் கேட்ச் மென்ட் ஆகிய நீர்பிடிப்பு பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சிற்றோடைகள் உற்பத்தியாகின்றன.

இவைகள் புளிமலை, நாடுகாணி மடிப்பு மலை என 3 சிற்றோடைகளாக மாறி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின் கிங்குருண்டி என்ற இடத்தில் பவானி நதியாக உருமாறுகின்றன.

இந்த நதி தமிழகத்தில் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து, கேரள மாநிலத்துக்குள் நுழைந்து பவானி புழாவாக மாறுகிறது. இது தவிர அப்பர் பவானி அருகில் இருந்து தொடங்கும் பக்தவத்சலம் சாகர் ஆறும், கேரள எல்லையில் பவானி ஆற்றுடன் கலக்கிறது.

பின்னர் இந்த ஆறுகீழ் பவானி, துடுக்கி, கோட்டத்தரை வனப்பகுதிகள் வழியாக சென்று முக்காலி என்கிற பகுதியை அடைகிறது. அங்கிருந்து அட்டப்பாடி, கூடப்பட்டி, அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு செல்கிறது.

இந்த பில்லூர் அணைதான்...கோவை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அணை 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

கோவையை பொறுத்தவரை சிறுவாணி, ஆழியார், பில்லூர் குடிநீர் திட்டங்கள் மூலம் 236 எம்.எல்.டி. (23 கோடி லிட்டர்) குடிநீர் தினமும் வினியோகம் செய்யப்படுகிறது.

பில்லூர் குடிநீர் திட்டம்

இதில் சிறுவாணி வறண்டபோதும், பில்லூர்தான் தில்லாக இருந்து தாகம் தணிக்கிறது. பில்லூர் முதல் மற்றும் 2-ம் கட்ட திட்டங்கள் மூலம் மட்டும் ஒரு நாளைக்கு 126.9 எம்.எல்.டி. குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

3-வது குடிநீர் திட்டம் ரூ.799 கோடி செலவில் செயல்படுத்தப ்பட்டு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

3-வது குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக நகருக்கு 17 கோடியே 80 லட்சம் லிட்டர் கோவை நகருக்கு கிடைக்கும். இந்த திட்டத்தை கோவை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. பில்லூர் அணை என்றும் வற்றாத அணையாக உள்ளது.

வருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் நிரம்பி இருக்கும். அதிலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் அணை 100 அடியை தொட்டு மாறுகால் பாயும். தற்போது அணையின் நீர்மட்டம் 76 அடியாக உள்ளது.

நீர் மின் திட்டத்துக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

40 சதவீதம் வண்டல் மண்

பில்லூர் அணைக்கு பவானி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் இருப்பதால் அணையை தூர்வார முடியவில்லை. அணையில் 40 சதவீதம் வரை வண்டல் மண்படிந்துள்ளது.

மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 25 அடி ஆழத்துக்கு வண்டல் மண் படிந்துள்ளது.

இந்த அணையை தூர்வாரா விட்டால் வருங்காலங்களில் வண்டல் மண்படிவது அதிகமாகி நீர் கொள்ளளவு மேலும் குறைந்து விடும். தண்ணீர் இருக்கும்போதே தூர்வாரும் திட்டத்தை செயல்படுத்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் தயாரிக்கப்பட்டது.

கிடப்பில் கிடக்கும் திட்டம்

பில்லூர் அணைக்கு தூர்வாரும் படகுகளை கொண்டு வந்து அணையை தூர்வார ரூ.150 கோடி செலவிட தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தமிழக அரசுக்கு திட்டவரைவு தயாரித்து அனுப் பப்பட்டது. ஆனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

ஆகவே வண்டல் மண் படிந்து நீர் தேக்கம் குறைந்து காணப்படும் அணையை தூர்வார வேண்டும் என்பது அனைத்துதரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறுவது என்ன என்றுபார்க்கலாம்:-

பில்லூர் அணை தூர்வாரப்படுமா என்பது குறித்து பில்லூர் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு இலவசம்

சுண்டக்கரை விவசாயி பாலசுப்பிரமணியம் :-

பில்லூர் அணையில் வண்டல் மண் படிந்து கிடப்பதால் கொள்ளளவு குறைந்து வருகிறது. இது வற்றாத அணை என்பதால் தண்ணீரை வெளியேற்றி விட்டு தூர்வார முடியாது.

அணையில் தண்ணீர் இருக்கும்போதே அணையை தூர்வார, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

தூர்வாரும் போது வரும் வண்டல் மண்ணை காரமடை, பில்லூர், சிறுமுகை, மேட் டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் செழிக்கும்.

சிறப்பு திட்டம் தேவை

காரமடை மங்கலக்கரை புதூரை சேர்ந்த ஆனந்தகுமார்:-

பில்லூர் அணையில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பில்லூர் அணையை ஒட்டிய குண்டூர் மலைவாழ் கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பது இல்லை. குடங்களுடன் காத்துக்கிடக்கும் நிலைமை உள்ளது.

எனவே அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். பில்லூர் அணையை தூர்வார சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பாதுகாக்க வேண்டும்

காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த சத்யபிரியா:-

காரமடை உள்பட பல பகுதிகளுக்கும் பில்லூர் அணை வரப்பிர சாதமாக உள்ளது. பில்லூர் அணை இதுவரை தூர்வாரப்பட்ட தாக தெரியவில்லை.

எனவே அதை தூர்வாரினால் அதிக தண்ணீரை தேக்க முடியும். வருங்காலங்களில் குடிநீர் தேவை அதிகரிக்கும். எனவே பில்லூர் அணையை பாதுகாப்பதுடன், நவீன முறையில் தூர்வாரும் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பில்லூர் அணையில் மண் மற்றும் குப்பைகள் குவிந்து வருகின்றன.

எப்போதும் தண்ணீர் இருக்கும் அணையை தூர்வாருவது எளிதல்ல. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மேலும் சில துறைகளுடன் இணைந்து இந்த அணையை தூர்வாருவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

நீர்மின் நிலையங்கள்

பில்லூர் அணை கட்டும் பணி 1961-ம் ஆண்டு தொடங்கி 1966-ம் ஆண்டு முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 1966-ம் ஆண்டு பிப்ரவரி 27 -ந்தேதி அணையில் முதல் நீர்மின் நிலையம் (அலகு-1) இயக் கப்பட்டது. 2-வது நீர்மின்நிலையம் (அலகு-2) 1978 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி இயக்கப்பட்டது.

இந்த 2 நீர்மின்நிலையங்களில் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகம் (டான்ஜெட்கோ) தலா 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

அணை தூர்வாரப்படாவிட்டால், பில்லூர் அணையில் 2 நீர்மின் நிலையங்களையும் இயக்க முடியாதநிலை ஏற்பட்டு விடும். 1991-ம் ஆண்டில் அணையில் படிந்து கிடக்கும் வண்டல் மண்களை அகற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story