பிடாரியம்மன் கோவில் தேரோட்டம்
பெருங்களூர் பிடாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிடாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் கிராமத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
அசைந்தாடி வந்த தேர்...
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு மாட வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் பொங்கல் வைத்தும், தேருக்கு முன் தேங்காய் உடைத்தும், கிடாய் வெட்டியும் அம்மனை வழிபட்டனர்.
இதில் பெருங்களூர், கூத்தாச்சிப்பட்டி, மணவாத்திபட்டி, குட்டகுளவாய்ப்பட்டி, லெட்சுமிபுரம், மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி, பாப்பாவயல், போரம், மாந்தாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.