ஈரோட்டில் பரிதாபம்: 2-வது மாடியில் இருந்து விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
ஈரோட்டில் 2-வது மாடியில் இருந்து விழுந்த கட்டிட தொழிலாளி இறந்தாா்.
ஈரோடு சூரம்பட்டி பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சிந்தாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் சண்முகம் கட்டிட வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது 2-வது மாடியில் வெளிப்பக்கம் காரை பூசுவதற்கு சாரத்தின் சவுக்கு கட்டை மீது நின்று பூசிக்கொண்டு இருந்தபோது, சவுக்கு கட்டை உடைந்து நிலைதடுமாறி சண்முகம் கீழே விழுந்து விட்டார்.இதில் அவருக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.